"ஸ்கூல் ஃபீஸ்-க்கு வச்சிருந்த 64000 ரூபாயை எடுத்து சிஎஸ்கே மேட்ச்சுக்கு பிளாக் டிக்கெட் வாங்கினோம்"
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியை காண தன் மகள்களின் பள்ளிக் கட்டணத்தை எடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி இருக்கும் சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
ஐபிஎல் அணிகள் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு என்பது நாளுக்கு நாள் வெறித்தனமாக மாறி வருகிறது. அதிலும் ஐபிஎல் தொடரில் மிக அதிக ரசிகர்களை கொண்ட அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சிஎஸ்கே அணிக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் தோனி தான்.

2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஆடும் போட்டிகளை காண ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாத பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி சிஎஸ்கே போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த ஒருவர் தன் இரண்டு மகள்களுடன் சேர்ந்து சிஎஸ்கே போட்டியை காண ரூ.64,000 செலவு செய்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி இருக்கிறார். பள்ளிக் கட்டணம் கட்ட வைத்திருந்த பணத்தை எடுத்து தான் டிக்கெட் வாங்கியதாகவும், பள்ளிக் கட்டணத்தை பின்னர் கட்டிக் கொள்வேன் என்றும் அவர் கூறினார். அதே சமயம், போட்டியில் தோனி பேட்டிங் ஆட வந்ததால் தானும், தன் மகள்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிலர் பள்ளிக் கட்டணத்தை எடுத்து ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் வாங்கியது முட்டாள்தனம் என விமர்சனம் செய்து வருகின்றனர். அதே சமயம் வேறு சிலரோ அவர் தன் மகள்களை மகிழ்விக்க இதை செய்து இருக்கிறார். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிஎஸ்கே போட்டியை நேரில் கண்டதை மறக்க மாட்டார்கள் எனவும் கூறி உள்ளனர். சிலர் பிளாக் டிக்கெட் வாங்கினேன் என ஒருவர் வெளிப்படையாக கூறும் நிலையில் தமிழ்நாடு அரசு பிளாக் டிக்கெட் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications