சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணியிடம் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவி தற்போது தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது.
சிஎஸ்கே அணி எப்போதுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என்று ரசிகர்கள் பெருமையாக பேசி வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே தவறவிட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இன்றைய தோல்விக்கு முக்கிய காரணம் கேப்டன் ருதுராஜ் செய்த தவறுதான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்தாலும், இன்னும் கூடுதலாக 10 ரன்கள் அடித்து இருந்தால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்கும். ஆனால் கேப்டன் ருதுராஜ் பில்டிங்கில் கேமரான் கிரீன் கொடுத்த கேச்சை தவறவிட்டார்.
அப்போது கேமரன் கிரீன் வெறும் 18 ரன்கள் தான் அடித்து இருந்தார். அந்த கேட்சை அவர் தவறவிட்டதால், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் கேமரான் கிரீன் 38 ரன்கள் எடுத்திருந்தார். இதில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று பேட்டிங்கில் ருதுராஜ் ஆட்டத்தின் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதுவும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஒருவேளை ருதுராஜ் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால், சிஎஸ்கே அணி வென்றிருக்கலாம். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு பிறகு கேப்டன் ருதுராஜ், ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் டுபிளசிஸ் இருந்த போது, இருவரும் தொடக்க வீரராக களமிறங்குவார்கள்.இருவரும் நல்ல நட்புடன் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் நண்பருக்காக ருதுராஜ் விட்டுக் கொடுத்து விட்டாரா என்று சில சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் சொதப்பியதும் சந்தேகத்தை கிளப்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் என்ற ஒரு நினைப்பே இல்லாமல் டுபிளசிஸ் விட்டுக் கொடுத்து அவரை கட்டி அணைத்தது போல் இருப்பதாக சில ரசிகர்கள் குறை கூறியிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்த மற்றொரு தரப்பினர் அணி கடந்து இருவரும் நட்புடன் இருப்பதை குறை சொல்லக்கூடாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.