மும்பை : ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். 2024 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் சிஎஸ்கே அணி இதுவரை அதிக முறை பிளே ஆஃப்க்கு சென்ற அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 முறையும், ஆர் சி பி அணி 9 முறையும், கே கே ஆர் அணி எட்டு முறையும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த சூழலில் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி, இறுதிப் போட்டி வரை சென்று ரன்னர் அப் பட்டதை பெற்றது. இதே போன்று 2009 ஆம் ஆண்டு சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வரை சென்றது.2010 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி, சாம்பியன் பட்டத்தையும், 2011 ஆம் ஆண்டு முதல் இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
2012 ஆம் ஆண்டு புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி ரன்னர் அப் பட்டத்தையும், 2013-ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி மீண்டும் ரன்னர் அப் பட்டதையும் பெற்றது. 2014 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. 2015 ஆம் ஆண்டு முதல் இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி மீண்டும் ரன்னர் அப் பட்டத்தை பெற்றது.
2016 மற்றும் 17ஆம் ஆண்டு சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு மீண்டும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் பட்டத்தை பெற்றது. 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. ஐபிஎல் வரலாற்றில் அதுதான் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாத முதல் சீசன் ஆகும்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2022 ஆம் ஆண்டு புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்த சிஎஸ்கே லீக் சுற்றிலிருந்து வெளியேறியது. மீண்டும் 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது 2024 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடத்தை பிடித்து வெளியேறி இருக்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி மூன்றே மூன்று முறை தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.