IPL 2024 : இதுதான்யா நட்பு.. தோனி திருமணத்திற்கு சென்ற அனுபவம்.. சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்ஸ்!
மும்பை: சென்னை அணியின் கேப்டன் தோனியின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து அவரின் நண்பரான சுரேஷ் ரெய்னா சில ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை பெரியளவில் வெளிப்படுத்தி கொள்ள மாட்டார். கிரிக்கெட் கடந்து திருமணம், தொழில், விவசாயம், பைக், கார், பயணம், கொண்டாட்டம் என்று எதைப் பற்றியும் பொதுவெளியில் பேசாமல் தவிர்ப்பார்.

2010ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது நீண்ட நாள் தோழியான சாக்ஷியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் எப்போது காதலித்தனர், இவர்களின் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என்ற விஷயங்கள் தோனியின் சுயசரிதை வெளி வந்ததால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். அதனை கடந்து தோனி திருமண புகைப்படங்கள் கூட பொதுவெளியில் வந்ததில்லை.
அதேபோல் திருமணத்திற்கு இந்திய அணியின் வீரர்களுக்கு தோனி அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் தோனியின் திருமணத்தில் அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா மட்டும் கலந்து கொண்டுள்ளார். தோனி திருமணத்தில் பங்கேற்றது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், தோனியின் திருமணத்தில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவம். திடீரென என்னை செல்போனில் அழைத்த தோனி, ”எங்கே இருக்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு நான், லக்னோவில் உள்ள வீட்டில் இருப்பதாக கூறினேன். அதன்பின் தோனி, டெஹராடூனில் எனக்கு திருமணம் நடக்கவுள்ளது. அதனால் யாரிடமும் சொல்லாமல் விரைந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்பின் நானும் யாரிடமும் சொல்லாமல் சாதாரண உடைகளுடன் டெஹராடூன் சென்றடைந்தேன். அதன்பின் தோனியின் உடையை அணிந்து கொண்டு அவரது திருமணத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவுடன் தோனி எவ்வளவு நெருங்கிய நட்பை கொண்டுள்ளார் என்பதும், இருவருக்கும் இடையிலான நட்பையும் அறிய முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே நண்பனுக்காக ரெய்னாவும் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 24, 2023, 20:30 [IST]
Other articles published on Dec 24, 2023


Click it and Unblock the Notifications