IPL 2024 : லக்னோ அணிக்கு செல்லும் சிஎஸ்கே சிங்கம்.. ஜஸ்டிங் லாங்கருக்கு உதவியாக உள்ளூர் நாயகன்!
லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது தோனியின் தளபதியாய் இருந்தவர் சுரேஷ் ரெய்னா. எந்தவொரு அணியாக இருந்தாலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று தோனி நீட்டிய இடத்தில் எல்லாம் பொளந்து கட்டியவர். இதன் காரணமாகவே சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ரசிகர்கள் "சின்ன தல" என்று கொண்டாடி வருகின்றனர்.

மெகா ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வராத நிலையில், தற்போது இளம் வீரர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். அதேபோல் தனது ஹோட்டல் தொழிலை வெளிநாடுகளிலும் தொடங்கி வருகிறார். இதனிடையே விளம்பரங்களில் நடிப்பதுடன், ஐபிஎல் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே சுரேஷ் ரெய்னாவின் சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அதேபோல் உத்தர பிரதேச வீரர்களின் டெக்னிக்கும் சிறப்பாக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் சுரேஷ் ரெய்னா ஆதரித்த ரிங்கு சிங், சமீர் ரிஸ்வி இருவரும் ஐபிஎல் தொடரின் உச்ச அணிகளுக்கு ஆடி வருகின்றனர்.
இதனால் சுரேஷ் ரெய்னாவை பல்வேறு அணிகளும் ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது. அந்த வகையில் கடந்த மாதம் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், கேகேஆர் அணிக்கு மாற்றமடைந்தார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகர் பதவி காலியாக உள்ளது.
இந்த பதவியில் உள்ளூர் நட்சத்திரமான சுரேஷ் ரெய்னாவை நியமிக்க லக்னோ அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதற்காக சுரேஷ் ரெய்னாவை அணுகியதாகவும், அதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில் லக்னோ அணியுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் சுரேஷ் ரெய்னா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications