மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் யார் என்ற பட்டியல் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும்.
இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் பங்கேற்பதற்காக தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை விடுவித்து அந்த பணத்தை வைத்துக்கொண்டு மினி ஏலத்தில் பங்கேற்கும்.

அந்த வகையில் ஒவ்வொரு அணியும் யாரை விடுவிக்கலாம் யாரை குறிவைத்து மினி ஏலத்தில் எடுக்கலாம் என்று யோசித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார்.
இதனால் சிஎஸ்கே அணி அவரை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. இதேபோன்று அம்பத்தி ராயுடு ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளதால் அவரும் விடுவிக்கப்படுவார். இதேபோன்று தென்னாப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் பிரிட்டோரியஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சிசான்டா மங்கலா மற்றும் நியூசிலாந்து வீரர் கேயில் ஜேமிசன் ஆகியோரை விடுவிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவெடுத்துள்ளது. ஸ்டோக்சின் 16 கோடியே 25 லட்சம் ரூபாய் மற்றும் ராயுடுவின் 6 கோடியை 75 லட்சம் ரூபாய் என சிஎஸ்கே கையில் 30 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது.
இதனை வைத்துக்கொண்டு சிஎஸ்கே அணி ஏதேனும் இரண்டு அல்லது மூன்று பெரிய வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கலாம். குறிப்பாக மினி ஏலத்தில் குறைந்த அளவிலே கையிருப்பு பல அணிகள் மத்தியில் இருக்கும். ஆனால் தற்போது சிஎஸ்கே 30 கோடி ரூபாயை கையிருப்பில் வைத்துக் கொண்டு களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹாரி புரூக், பஞ்சாப் அணியில் இருந்து ஷாம் கரன், கேகேஆர் அணியிலிருந்து டிம் சவுதி, சர்துல் தாக்கூர்,லோகி பெகுர்சன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மினி ஏலத்தில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ரச்சின் ரவீந்திரா, டேரன் மிச்சல் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.