சென்னை : 2024 ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி திடீரென விலகினார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ருதுராஜ் தலைமையில் களம் கண்ட சிஎஸ்கே அணி ஐந்து போட்டிகளில் ஆடி, மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திடீரென கேப்டனாக நியமிக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை கேப்டன் தோனி மெருகேற்றி வந்திருக்கிறார். அதே போல பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அவருக்கு கேப்டனாக செயல்பட பயிற்சி அளித்துள்ளார்.

இது குறித்த தகவல்களை ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் போட்டிக்கு பிந்தைய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.
அதன் பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டை சந்தித்து, கேப்டன்சி குறித்து தோனி பேசி இருக்கிறார். "இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து உனக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இப்போதிருந்தே தயாராக இரு" என ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனி கூறி இருக்கிறார். அதன் பின் 2023 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கேப்டனாக செயல்பட சரியான நபர் தானா? என ஒவ்வொரு போட்டிக்கு பின்பும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சோதித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் பிளெம்மிங், அந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தால் என்ன முடிவு செய்து இருப்பார்? என கேட்டு இருக்கிறார். அவருக்கு ஆலோசனைகளும் கூறி இருக்கிறார் பிளெம்மிங். இப்படி இரண்டு ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டே ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதன் காரணமாகவே 2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். இனியும் இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.