சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தாபிசூர் ரஹ்மான். இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி உள்ள அவர் 10 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த ஆண்டு இதுவரை நடந்த போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்று இருக்கிறார். சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், அந்த நான்கு வெற்றிகளிலும் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அமைப்பு முஸ்தாபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பப் பெறுவதாக கூறி உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பின் அனுமதி பெற்றே ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும். அந்த வகையில் முஸ்தாபிசூர் ரஹ்மானை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வங்கதேச அணி ஆட உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வைக்க இருப்பதாக கூறி வங்கதேச கிரிக்கெட் அமைப்பு திரும்ப அழைத்துள்ளது.
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள டி20 தொடர் மே 3 அன்று துவங்க உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 31 அன்று முஸ்தாபிசூர் ரஹ்மானை திரும்ப அனுப்புமாறு வங்கதேச அமைப்பு கூறி உள்ளது. மே 1 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி வரை அவரை விளையாட அனுமதிக்குமாறு சிஎஸ்கே அணி கோரி உள்ளது. அதற்கு வங்கதேச கிரிக்கெட் அமைப்பு சம்மதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஜலால் யூனுஸ் கூறுகையில், ஐபிஎல் தொடரில் முஸ்தாபிசூர் கற்றுக் கொள்ள எதுவுமே இல்லை. அவரைப் பார்த்து தான் மற்ற வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். அவரது வளர்ச்சிக்கு இனி ஐபிஎல் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. சிஎஸ்கே அணி அவரை 100 சதவீதம் பயன்படுத்தி வருகிறது. எனவே, அவர் ஜிம்பாப்வே தொடரில் ஆடுவதை விட அவரது உடற்தகுதி குறித்து தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என கூறி உள்ளார்.
முஸ்தாபிசூர் ரஹ்மான் மே 1 வரை ஆடும் நிலையில் லீக் சுற்றில் சிஎஸ்கே அணி அப்போது 10 போட்டிகளில் ஆடி இருக்கும். எனவே, பிளே-ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றால் அப்போது முஸ்தாபிசூர் போன்ற அனுபவ வேகப் பந்துவீச்சாளர் இல்லாமல் சிஎஸ்கே அணி தடுமாறும் நிலை ஏற்படும்.