சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்த முக்கியமான வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, தோனி செய்த ஒரு செயலை தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என கூறி இருக்கிறார்.
2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. களத்தில் ஜடேஜா பேட்டிங் செய்து வந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார் ரவீந்திர ஜடேஜா. அப்போது கேப்டன் தோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். இதற்கு முன் எந்த ஒரு வெற்றியின் போதும் தோனி இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில்லை. அவர் கண்கள் கலங்கிய நிலையில் ஜடேஜாவை கட்டி அணைத்து தூக்கினார்.
ஐபிஎல் வரலாற்றில் இந்த காட்சி முக்கியமான ஒன்றாக மாறியது. அடுத்த நாள் முழுவதும் இணையத்தில் அந்த புகைப்படமே நிரம்பி இருந்தது. அந்த போட்டிக்கு பின் ஓராண்டு கழித்து மீண்டும் சிஎஸ்கே வீரர்கள் ஒன்று கூடி உள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, அந்த நிகழ்வு குறித்து சிஎஸ்கே அணியின் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
"தோனி என்னை நிறுத்தி அப்படியே என்னை தூக்கினார். இது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் ஒன்றாக மாறி விட்டது. தல தோனியின் இந்த தழுவலை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இது என் இதயத்தில் எப்போதும் அப்படியே இருக்கும். லவ் யூ தல" என ரவீந்திர ஜடேஜா அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.
2023 சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.