சிஎஸ்கே அணிக்கு முதல் அடி.. கைவிரித்த மருத்துவர்கள்.. நியூசிலாந்து அதிரடி வீரர் விலகல்?
சென்னை : கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட டெவான் கான்வே 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் மே மாதம் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
டெவான் கான்வே சிஎஸ்கே அணியில் நிச்சயம் போட்டிகளில் களமிறங்கும் 11 வீரர்களில் ஒருவராக இடம் பெறுவார் என கருதப்பட்ட நிலையில் அவரது காயம் குறித்த செய்தி சிஎஸ்கே அணிக்கு பெரிய இடியாக அமைந்துள்ளது.

டெவான் கான்வே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆடிய போது அவரது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிச்சயம் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என கூறியதை அடுத்து அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
அதன் பின் எட்டு வாரங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. அதன்படி பார்த்தால் மே மாதம் முதல் வாரம் வரை அவரால் எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. 2024 ஐபிஎல் தொடர் மார்ச் 23 அன்று துவங்கி மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. எனவே, டெவான் கான்வே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாது.
இது போன்ற நிலை ஏற்பட்டால் ஒரு ஐபிஎல் அணி காயத்தால் விலகி இருக்கும் வீரரை அணியில் இருந்து நீக்கி விட்டு மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், டெவான் கான்வே சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்த நிலையில் அவரை சிஎஸ்கே அணி நீக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டெவான் கான்வே ஆடாவிட்டால் வேறு துவக்க வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிஎஸ்கே அணி. மற்றொரு நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செல் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications