சென்னை : ஐபிஎல் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடரில் 133 போட்டிகளுக்கு தோனி கேப்டனாக இருந்திருக்கிறார்.
மேலும் சிஎஸ்கே அணியை சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் எல்லாம் சேர்த்து 200 முறை வழி நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக 2021 ஆம் ஆண்டு முதல் மோயின் அலி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நடப்பு சீசன் குறித்து பேசிய மோயின் அலி, தோனியை வெகுவாக பாராட்டுகிறார். இது குறித்து பேசிய அவர், தோனி எவ்வளவு ஸ்பெஷல் வீரர் என்று அனைவருக்குமே தெரியும். அவர் ஸ்பெஷல் கேப்டன் கூட, அவர் ஒரு நல்ல மனிதர். அவருடன் மூன்று சீசன்களில் நான் விளையாடிருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவர் என்ன கொண்டு வரப் போகிறார் என்று யாருக்குமே தெரியாது. அவருடைய கிரிக்கெட் யுக்திகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். ஒரு வீரராக அதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதுமே அணியில் உள்ள ஒரு வீரர்களுக்கு ஒவ்வொரு பொறுப்பை அவர் வழங்கி விடுவார்.
நீங்கள் சிஎஸ்கே அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடும் போது உங்கள் அணி எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி எவ்வளவு பலமாக இருந்தாலும் சரி நிச்சயமாக வெற்றி பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. நான் தொடர்ந்து விளையாட ஆசைப்படுகிறேன். அணிக்கு நான் பங்களிப்பை அளிக்க முடியும் என்று தர முடியும் என்று எனக்கு தோன்றும் வரை நான் விளையாடுவேன்.
இம்ரான் தாகிர் போன்ற வீரர்களை எல்லாம் பாருங்கள். அவர்கள் 44 வயது வரை இன்னும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதே போன்று பாகிஸ்தான் வீரர் மாலிக்கும் நீண்ட காலமாக விளையாடுகிறார். குறிப்பாக நான் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. இதன் மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயமாக என்னால் விளையாட முடியாது என்ற ஒரு காலம் வரும். அதுவரை நான் கண்டிப்பாக விளையாடுவேன் என மோயின் அலி கூறியிருக்கிறார். மோயின் அலி தற்போது நல்ல பார்மில் இருப்பது சிஎஸ்கேவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.