சென்னை : சிஎஸ்கே அணி நிர்வாகம் நட்சத்திர வீரர் தோனியை டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதற்கு களமிறக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரெட் லீக் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்றது டெல்லி அணியாக இருந்தாலும், மைதானத்தில் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபட்டது என்னவோ சிஎஸ்கே அணி தான். ஏனென்றால் கடைசி 20 நிமிடங்களில் சிஎஸ்கே அணியின் தோனி ஆடிய ருத்ரதாண்டவம் ஒவ்வொரு சென்னை அணி ரசிகனையும் உற்சாகமாக்கியுள்ளது.

16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களை எளிதாக விளாசி தள்ளினார் தோனி. கிட்டத்தட்ட 307 நாட்களுக்கு பின் களமிறங்கிய தோனியின் ஆட்டத்தை பார்த்ததே போதும் என்ற மனநிலையில் தான் சிஎஸ்கே அணி இருந்தனர். ஆனால் தோனி அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடி ஐபிஎல் திருவிழாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் தோனி பேட்டிங் வரிசையில் இன்னும் கீழே கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 6வது வீரராக களமிறங்கிய தோனி, இந்த சீசனில் 8வது வீரராக வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தோனி 8வது வீரராக வருவார் என்று தெரிந்ததால், பல்வேறு அணிகளின் ரசிகர்கள் தோனியை கிண்டல் செய்து வந்தனர்.
எல்லாவற்றுக்கும் சேர்த்து தோனி தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் ரன் ரேட்டை காப்பாற்றும் வகையில் அபாரமான இன்னிங்ஸையும் விளையாடியுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அடுத்தடுத்த போட்டிகளில் தோனியை கொஞ்சம் டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிரெட் லீ-யும் ரசிகர்களை போல் சிஎஸ்கே அணிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், தோனி இந்த இன்னிங்ஸில் கண்டபடி எந்த ஷாட்டையும் விளையாடவில்லை. அத்தனையும் சரியாக மிடில் பேட்டில் அடிக்கப்பட்ட ஷாட்கள். இதனால் தோனியின் பேட்டிங்கை இன்னும் அதிகமாக பார்க்க விரும்புகிறேன். அவரை சிஎஸ்கே அணி டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும்.
அவர் இப்போதும் சிறப்பாக விளையாடுகிறார். அவரால் இன்னும் சரியாக கிரிக்கெட் புரிந்து முடிவு எடுக்க முடிகிறது. அதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் தயவு செய்து தோனிக்கு அதிகமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். கவர் திசையில் அவர் அடித்த ஷாட் மிகவும் கடினமானது. அவர் இப்போதும் அந்த ஷாட்டை சரியாக அடிப்பது ஆச்சரியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.