Chennai super Kings : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர் சி பி அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் வரும் மார்ச் முதல் வாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த முறை போல் இம்முறையும் தோனி கோப்பையுடன் வெளியேற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலானது. இது சென்னை ரசிகர்களை லேசாக கலக்கம் அடைய செய்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேருந்து தற்போது தயாராகி வருகிறது. ஒவ்வொரு நகரத்திற்கும் சிஎஸ்கே செல்லும்போது ஏர்போர்ட்டில் இருந்து ஹோட்டலுக்கும், ஹோட்டலில் இருந்து கிரிக்கெட் மைதானத்திற்கும் செல்ல சிஎஸ்கே அணியின் பேருந்து பயன்படுத்தப்படும்.
சி எஸ் கே அணியின் அந்த வாகனம் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் வீரர்களுக்குமே மனதில் எப்போதும் இருக்கும். அந்த வாகன ஓட்டுனர் கூட சிஎஸ்கே வீரர்களில் உடன் பிறவா சகோதரர் போல் தான் இருப்பார். இதனால்தான் சிஎஸ்கே அணியின் பேருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பேருந்து மஞ்சள் நிறத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அணியின் நட்சத்திர வீரர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில் பேருந்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் எப்போதுமே கேப்டனின் படம் தான் பெரியதாக நடுவில் இருக்கும். அந்த வகையில் தற்போது வைரலான புகைப்படத்தில் ஜடேஜாவின் படம் மட்டும் தான் பெரியதாக நடுவில் இருக்கிறது. இந்தப் புகைப்படத்தில் தோனியின் படம் காணப்படவில்லை. இதனால் இம்முறை தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? சிஎஸ்கே அணியை தோனி வழிநடத்துவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
மேலும் சிஎஸ்கே புதிதாக வாங்கியுள்ள ரச்சின் ரவீந்திரா மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரரும், இம்முறை ஏலத்தில் வாங்கப்பட்ட சர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், மோயின் அலி ஆகியோரின் புகைப்படங்கள் அந்தப் பேருந்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தோனியின் புகைப்படம் இல்லாதது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு தரப்பு ரசிகர்களும் தோனியின் புகைப்படம் நிச்சயம் அந்த பேருந்தில் இடம் பெற்றிருக்கும் என்றும், இது பேருந்தில் ஒரு பகுதி மட்டும்தான் தற்போது வெளியாகி இருப்பதால் இறுதி புகைப்படம் வெளியாகும் வரை காத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தோனி இந்த ஆண்டு நிச்சயம் விளையாடுவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.