லக்னோ : லக்னோ அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சிஎஸ்கே அணியின் ட்ரையல்ஸில் பங்கேற்றுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அமைந்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 12 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மயங்க் யாதவ் வீசிய பந்து 156 கிமீ வேகத்தில் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 ஓவர்களையும் 145 கிமீ வேகத்திற்கு குறையாமல் வீசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் உம்ரான் மாலிக்கிற்கு இணையான மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவில் உருவாகிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மயங்க் யாதவின் வேரியேஷன் மற்றும் கட்டுப்பாடு தான் அவரது வேகத்திற்கு உதவியாக உள்ளது. 21 வயது இளைஞனால் எப்படி இவ்வளவு வேகத்தை கொண்டு வர முடிகிறது என்று பலரும் வியப்பில் உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டிலேயே லக்னோ அணிக்காக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி முகாமின் போது மயங்க் யாதவ் காயம் காரணமாக விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சீசனில் மயங்க் யாதவவை பாதுகாத்து 2வது போட்டியில் அறிமுகம் செய்துள்ளது லக்னோ அணி. அவர் 2022ஆம் ஆண்டிலேயே லக்னோ அணிக்காக ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மயங்க் யாதவ் சிஎஸ்கே அணி சார்பாக நடத்தப்பட்ட ட்ரையல்ஸில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. அந்த ட்ரையல்ஸில் மயங்க் யாதவ் அதிக வேகத்தில் வீசி சிஎஸ்கே நிர்வாகிகளை அசரடித்துள்ளார். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் அதிகளவிலான வேகத்தில் வீசினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அதிக வேகத்தில் வீசும் பவுலர்களை நேரில் பார்த்த பின்னரே முடிவு செய்வார் என்பதால், மயங்க் யாதவை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.