சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி, அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எளிதாக வீழ்த்தியது.
இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தற்போது மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது சிஎஸ்கே அணி. இந்தப் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மார்ச் 31 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்க உள்ளது. டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து தனது மூன்றாவது போட்டியில் அந்த அணி சேப்பாக்கம் மைதானத்தை தாண்டியும் வெற்றி பெற்றால் ருதுராஜ் கெய்க்வாட் மீதான சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாகும்.
மறுபுறம் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்து டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஆனால், அந்த அணியும் வெற்றி பெறவில்லை. அவரும் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அவரால் அதிக பந்துகளை சந்திக்க முடிந்தாலும் அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை. இந்த சிக்கலை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சமாளித்தால் மட்டுமே டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும்.
தற்போது புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது சிஎஸ்கே அணி. மேலும் 1.979 என்ற நெட் ரன் ரேட் வைத்துள்ளது. மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் மிக அதிகமாக இருக்கிறது. டெல்லி அணி இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் தோல்வி அடைந்து புள்ளிகள் எதுவும் பெறாமல், -0.528 என்ற நெட் ரன் ரேட் உடன் எட்டாவது இடத்தில் உள்ளது.