விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தல தோனி அடித்த சிக்சரை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், இதுவே அவரின் கடைசி சீசன் என்பது ரசிகர்களுக்கு புரிய வந்தது. இதனால் தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது டாப் ஆர்டர் வீரர்களே பேட்டிங் செய்தனர். இதனால் தோனிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சீசனில் ஜடேஜாவுக்கு முன்பாகவே சில போட்டிகளில் களமிறங்கிய தோனி, இந்த சீசனில் ஜடேஜாவுக்கு பின் 8வது வீரராக களமிறங்க முடிவு செய்தார்.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ருதுராஜ் 1, ரச்சின் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த மிட்சல் 34 ரன்களிலும், ரஹானே 45 ரன்களிலும், ரிஸ்வி டக் அவுட்டாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், தோனி களமிறங்கினார். கிட்டத்தட்ட ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவது கடினம் என்று பார்க்கப்பட்டது. இருப்பினும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் தோனி பேட்டிங் செய்வதை ரசிகர்கள் பார்ப்பதால், உற்சாகத்தில் சிஎஸ்கே என்று கோஷம் எழுப்பி கொண்டாடினர். தொடர்ந்து தோனி என்ற கோஷம் விண்ணை பிளந்தது.
தொடர்ந்து முகேஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தோனி அசத்த, ஆர்ப்பரிப்பு வானத்தை எட்டியது. தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி ஓவரில் மீண்டும் பவுண்டரி அடிக்க, பின்னர் வீசிய கலீல் அஹ்மத் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபாரமாக ஒரு சிக்ஸரை விளாசினார். கடைசி ஓவருக்கு முன்பே ஆட்டம் சிஎஸ்கே அணியை விட்டு சென்றது.
பின்னர் நார்கியே வீசிய கடைசி ஓவரில் தோனி 4, 6, 4, 6 என்று 20 ரன்களை விளாசினார். இதன் மூலமாக 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி தோனி அசத்தினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், தோனியின் ஆட்டத்தை உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.