சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் தோனியின் செல்வாக்கு என்ன என்பதை பார்த்து மும்பை லாபியை சேர்ந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மிரண்டு போனார். ஏற்கனவே, இதுபோன்ற பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்தாலும் அப்போது தோனி பேட்டிங் செய்த போதோ அல்லது அவர் கேப்டன்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதோ ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.
2024 ஐபிஎல் தொடரில் தோனி இதுவரை பேட்டிங் செய்யவில்லை. அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனும் இல்லை. விக்கெட் கீப்பிங் மட்டுமே செய்து வருகிறார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் தோனியின் வழக்கமான பேட்டிங், கேப்டன்சி ஆகியவற்றை பார்க்க முடியாமல் இருந்த ரசிகர்கள் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போது தோனி திரையில் காட்டப்பட்ட போது ஆர்ப்பரித்தனர்.

சிஎஸ்கே அணி அப்போது 200 ரன்களை நோக்கி ரன் குவித்து வந்தது. ரச்சின் ரவீந்திரா 46, ருதுராஜ் 46 ரஹானே 12 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த சிவம் துபே 5 சிக்ஸ், 2 ஃபோர் அடித்து அரைசதம் அடித்தார். அப்போது அவரது பேட்டிங்கை பாராட்ட தோனி வீரர்கள் அறையில் இருந்து எழுந்து நின்றார். அந்த காட்சி திரையில் காட்டப்பட்டது.
அதுவரை சிவம் துபே ஆட்டத்தை கண்டு கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் அப்படியே தோனியை பார்த்த உடன் கோஷமிடத் துவங்கினர். அந்த சத்தம் அடுத்த ஒரு நிமிடத்துக்கு விண்ணை முடியாது. அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "தோனி திரையில் தான் இருக்கிறார். ஆடுகளத்தில் கூட இல்லை.." என சிஎஸ்கே ரசிகர்கள் செயலைக் கண்டு மிரண்டு போய் கூறினார்.
கடந்த காலங்களில் பல முறை சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தோனி குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் தோனியின் செல்வாக்கை அவரது கடைசி ஐபிஎல் தொடரில் கண்டு மிரண்டு போனார் அவர். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.