அகமதாபாத் : சிஎஸ்கே அணியின் இம்பேக்ட் பிளேயராக வந்த அஜிங்கியா ரஹானே, 3 விக்கெட்டுகளை இழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் விளாசினர். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக சுப்மன் கில் - சாய் சுதர்சன் இருவரும் இணைந்து 210 ரன்களை குவித்து சாதனை படைத்தனர்.

இதன்பின் 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் இம்பேக்ட் பிளேயரான அஜிங்கியா ரஹானே கூட்டணி களமிறங்கியது. ரஹானேவுக்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பேட்டிங் வரிசையை தியாகம் செய்தார்.
இந்த சீசனில் ரஹானே எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. இருப்பினும் நம்பிக்கை வைத்து ரஹானேவை அனுப்பிய நிலையில், முதல் ஓவரிலேயே டேவிட் மில்லர் கைகளில் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். ரஹானேவின் அழைப்பை ஏற்று வந்த ரச்சின் ரவீந்திரா, டேவிட் மில்லரின் அபார ஃபீல்டிங்கால் 1 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து சந்தீப் வாரியர் வீசிய முதல் பந்திலேயே ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. இதனால் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் மீதான அழுத்தம் அதிகரித்தது. இதனால் தொடக்கத்திலேயே அட்டாக் செய்ய முயன்று டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ரஹானே ஒருவரை அணிக்குள் கொண்டு வருவதற்காக சிஎஸ்கே அணி திட்டங்களை மாற்றியது. ஆனால் ரஹானேவால் திட்டங்கள் மொத்தமாக சொதப்பியதோடு, 3 விக்கெட்டுகளையும் பறி கொடுத்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தால், முக்கிய காரணமாக ரஹானே இருப்பார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.