அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி களத்திற்கு வந்து தோனியின் கால்களில் விழுந்தது அவரது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடியது. சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மைதானத்தில் அதிகளவு கூடிவிடுவார்கள். இது கடந்த சில சீசன்களாகவே தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தோனி.

குஜராத் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதும் அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களே அதிகளவு காணப்பட்டனர். எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஜெர்சியுடன் விசில் அடித்து கொண்டு ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது சிவம் துபே 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, தோனி களம் புகுந்தார்.
அப்போது தோனிக்காக ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் 120 டெசிபிளாக இருந்தது. இதன்பின் கடைசி ஓவரில் ரஷீத் கான் வீசிய முதல் 2 பந்துகளில் தோனி அபாரமாக 2 சிக்சர்களை விளாசி தள்ளினார். 3வது பந்தில் தோனியின் கால்களில் பட்டு செல்ல, குஜராத் அணி தரப்பில் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் வீரர்கள் கூடி நின்று பேசி கொண்டிருந்தனர்.
அதன்பின் டிஆர்எஸ்-ல் தோனி நாட் அவுட் என்று தீர்ப்பு வந்த போது, திடீரென தோனி களத்தில் இருந்து கொஞ்சம் தூரமாக ஓட தொடங்கினார். தோனி எதற்காக ஓடுகிறார் என்று புரியாமல் வர்ணனையாளர்கள் குழம்ப, கேமரா ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி தோனியை நோக்கி ஓடி வந்தது தெரிய வந்தது. அப்படி ஓடி வந்த அந்த ரசிகர், தோனியின் கால்களில் விழுந்தார்.
இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு நிர்வாகிகள் அந்த ரசிகரை வெளியில் அழைத்து சென்றனர். எந்த ரசிகர் தோனியை நோக்கி ஓடி வந்தாலும், அவர்களுடன் ஒரு சிறிய விளையாட்டை தோனி விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான் இந்த போட்டியிலும் ரசிகர் ஒருவர் ஓடி வருவதை அறிந்து கொஞ்சம் மிதமாக ஓடி ஒரு விளையாட்டு காட்டினார்.