அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற 232 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே களமிறங்கியது. இந்த போட்டியில் அதிர்ஷ்டவசமாக டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆனால் டாஸை தவிர்த்து வேறு எந்த விஷயமும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு சாதகமாக நடக்கவில்லை. எகனாமி பவுலரான சான்ட்னர் பவுலிங்கிலேயே சிக்ஸ் அடித்து சுப்மன் கில் அட்டாக்கை தொடங்கினார்.

இதன்பின் சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் என்று யார் பந்துவீசினாலும் சுப்மன் கில் - சாய் சுதர்சன் இருவரும் பொளந்து கட்டினர். இதன் காரணமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் வழக்கம் போல் ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால் ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட, மீண்டும் அவர் வீசிய 9வது ஓவரில் ஒரு சிக்ஸ், பவுண்டரி உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது.
இதனிடையே அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் குவித்தது. இந்த சூழலில் சிமர்ஜீத் சிங் வீசிய 11வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் சுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். சிஎஸ்கே அணியின் அத்தனை பவுலர்கள் முயன்றும் இருவரின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை.
இதன்பின் சுப்மன் கில் - சாய் சுதர்சன் இருவரும் வான வேடிக்கையை காட்டினர். ஒவ்வொரு ஓவருக்கும் 2 சிக்சர்களை விளாசிய குஜராத் அணி 15 ஓவர்களில் 190 ரன்களை குவித்தது. பின்னர் சிமர்ஜீத் சிங் பவுலிங்கில் பவுண்டரியை விளாசி 50 பந்துகளில் சுப்மன் கில் தனது 4வது சதத்தை விளாசினார். இதனைத் தொடர்ந்து சாய் சுதர்சனும் 50 பந்துகளில் சிக்சர் அடித்து தனது முதல் சதத்தை விளாசினார். இதன்பின் மீண்டும் சிக்ஸ் அடிக்க முயன்ற சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களில் ஆட்டமிழக்க, மில்லர் - ஷாரூக் கான் கூட்டணி இணைந்தது. 19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 219 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரை சிமர்ஜீத் சிங் வீச வந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.