சென்னை : சிவம் துபே கடந்த 2023 ஐபிஎல் தொடரில் இருந்தே டி20 போட்டிகளில் முக்கிய வீரராக மாறி இருக்கிறார். 2019இல் இந்திய அணியில் இடம் பெற்ற சிவம் துபே அதன் பின் சில போட்டிகளில் மட்டும் வாய்ப்பு பெற்று பின்னர் நீக்கப்பட்டார்.
மேலும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இரண்டு ஆண்டுகள் இடம் பெற்ற சிவம் துபே வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக இடம் பெற்றார். உள்ளூர் தொடர்களிலும், ரஞ்சி ட்ராபியிலும் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே பெங்களூரு அணிக்காக ஆடும் போது சரியாக செயல்பட முடியாமல் திணறினார். அப்போதே அவரை ஆர்சிபி அணி வீணடித்து விட்டதாக விமர்சனம் எழுந்தது.

அத்துடன் சிவம் துபே ஃபார்ம் இழந்தார். அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை. அதன் பின் 2021இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றார். அதன் பின்னும் அவர் ஃபார்மில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அத்துடன் அவரது கிரிக்கெட் வாழ்வே முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
அந்த அணிகளில் எல்லாம் சிவம் துபே பந்துவீச்சாளராகவும், பின்வரிசை பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டு இருந்தார். இந்த நிலையில் 2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 4 கோடி கொடுத்து வாங்கியது. அப்போது பலரும் சிஎஸ்கே அணியை ஏளனம் செய்தனர். சிவம் துபேவால் சிஎஸ்கே அணிக்கு எந்த பயனும் இல்லை என விமர்சனம் எழுந்தது.
ஆனால், சிவம் துபேவின் முக்கிய பணியையே மாற்றினார் தோனி. அதாவது வேகப் பந்துவீச்சாளர் என்பதையே முதல் அடையாளமாக கொண்ட சிவம் துபேவை முழு நேர அதிரடி பேட்ஸ்மேனாக மாற்றினார் தோனி. 2022 ஐபிஎல் தொடரில் சிவம் துபேவை வெறும் பேட்ஸ்மேனாக பயன்படுத்தியது சிஎஸ்கே அணி. சிவம் துபே பெரிய நம்பிக்கையின்றி சிஎஸ்கே அணிக்கு வந்த நிலையில் அவருடன் தோனி நீண்ட நேரம் செலவிட்டு அவர் மனதில் இருந்த குழப்பங்களை போக்கி அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மாற்றினார்.
2023 ஐபிஎல் தொடரில் உச்சகட்ட ஃபார்முக்கு வந்த சிவம் துபே அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டு, சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தார். ஒரு ஃபினிஷராக சிறப்பாக செயல்பட்டார். இதை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய அணியிலும் வருக்கு வாய்ப்பு கிடைத்தது.
2024 ஐபிஎல் தொடரிலும் அதிரடி ஆட்டத்தால் இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் சிவம் துபே. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பின் சிவம் துபே பேசுகையில், சிஎஸ்கே அணி மற்ற ஐபிஎல் அணிகளை விட வித்தியாசமான அணி. என்னை மாற்றியதில் இந்த அணிக்கு பெரிய பங்கு உண்டு. நான் இந்த வெற்றியில் பங்கு பெற வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.