அகமதாபாத் : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனியின் காயம் குறித்தும், அவரின் ரோல் குறித்தும் பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும். ஆனால் நட்சத்திர வீரர்களின் காயம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நட்சத்திர வீரர் தோனி காயமடைந்த போதும், நம்பர் 9ல் களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சீசனில் தோனி இதுவரை எதிர்கொண்டுள்ள 49 பந்துகளில் 110 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் தோனியை நம்பர் 6 பேட்டிங் வரிசையில் ஜடேஜாவுக்கு முன்பாக களமிறக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேசுகையில், தோனியின் பேட்டிங் வரிசை குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் அது போட்டியின் சூழல் குறித்து முடிவு செய்யப்படும். கடந்தாண்டு தோனியின் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து தோனி முழுமையாக குணமடையாததால், அவரின் வேலைப்பளுவை குறைத்தே வைத்திருக்கிறோம்.
அவரால் 3 முதல் 4 ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். விக்கெட் கீப்பிங்கை பொறுத்த வரை, தோனியால் எளிதாக சமாளிக்க முடிகிறது. அதற்கு மேல் அவரின் வேலைப்பளுவை அதிகரித்தால், அடுத்தடுத்த போட்டியில் தோனியால் களமிறங்க முடியாத நிலை உருவாகும். சிஎஸ்கே அணியின் மாற்று விக்கெட் கீப்பராக ஆரவல்லி அவிஷாஷ் இருக்கிறார். அவரும் சிறந்த வீரர் என்றாலும், அவர் தோனி கிடையாது. ஏனென்றால் புதிய கேப்டனாக ருதுராஜிற்கு ஆலோசனை வழங்குவதும் தோனியின் ரோல் தான்.
தோனிக்கு என்று பிரத்யேக திட்டங்கள் வைத்துள்ளோம். விக்கெட்டுகள் விழுந்தால் நிச்சயம் தோனி வருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சேஸிங்கின் போது கடைசி 4 ஓவர்களில் ஓவருக்கு 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தால், தோனியை நிச்சயம் மேல் வரிசையில் களமிறக்குவோம். கடைசி நேரத்தில் தோனியால் தாராளமான சிக்சரும், பவுண்டரியும் விளாச முடியும் என்று தெரிவித்துள்ளார்.