அகமதாபாத் : காலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் சிஎஸ்கே அணி விளையாடும் அத்தனை போட்டிகளிலும் தோனி விளையாடுவதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக அடுத்த 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் பதிரானா, தீபக் சஹர், கான்வே, முஸ்தஃபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரும் விலகியுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணி கிட்டத்தட்ட பி டீமுடன் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியும் காயம் காரணமாக நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்று தெரிய வந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு போட்டியிலேயே நம்பர் 9 பேட்டிங் வரிசையில் களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டது. இதன்பின் சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில், தோனியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
காயத்தையும் பொருட்படுத்தாமல் தோனி விக்கெட் கீப்பிங் செய்து வருவதாகவும், மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் தோனி ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் காயத்துடன் அத்தனை போட்டிகளிலும் தோனி விளையாட வேண்டிய தேவை என்ன என்பது ஆராய்ந்த போது, முக்கிய தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இருந்த கான்வே காயத்தில் சிக்கியுள்ளார். இதனால் ஏலத்தின் போது யு19 இந்திய வீரரான ஆரவல்லி அவினாஷ் மட்டுமே விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணி வாங்கியது. இதனால் தோனி ஓய்வெடுத்தால், இளம் வீரர் ஆரவல்லி அவினாஷை தான் சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும்.
ஏற்கனவே சிஎஸ்கே நட்சத்திர வீரர்கள் பலரும் காயத்தால் விலகியதால், தோனி விலகினால் ருதுராஜ் கெய்க்வாட் தனித்துவிடப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு உதவி செய்வதற்காகவே காயத்தையும் பொருட்படுத்தாமல் தோனி விக்கெட் கீப்பிங்கை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.