சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இமாலய வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியின் இரண்டாவது பந்திலேயே குஜராத் அணியின் சாய் கிஷோர் ஒரு பெரிய தவறை செய்தார். அந்த ஒரு தவறால் போட்டியில் முன்னிலை பெறும் வாய்ப்பை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை சிஎஸ்கே அணியை எந்த வகையிலும் சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் துவக்கம் அளித்தனர். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு கேட்ச் கொடுத்தார். பந்து அவரது பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் சென்றது.
ஸ்லிப்பில் நின்று இருந்த சாய் கிஷோர் கைக்கு வந்த பந்தை தவற விட்டார். அந்த கேட்ச் நழுவியதால் ஒரு வாய்ப்பு பெற்ற ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் 12வது ஓவர் வரை களத்தில் நின்றார். அவரைச் சுற்றி ரச்சின் ரவீந்திரா, ரஹானே, சிவம் துபே ஆகியோர் பேட்டிங் செய்தனர்.
டக் அவுட் ஆகி இருக்க வேண்டிய ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்கவில்லை என்ற போதும், 5வது ஓவர் வரை குஜராத் அணியால் முதல் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. அந்த இடைவெளியில் மற்றொரு துவக்க வீரரான ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். ரஹானே 12 ரன்கள் மட்டுமே எடுத்த போதும், சிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். சமீர் ரிஸ்வி கடைசி இரண்டு ஓவர்களில் 6 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.
அடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் 5 ஓவர்களில் இரண்டு துவக்க வீரர்களையும் இழந்தது. துவக்கக் வீரர் சுப்மன் கில் 8 ரன்களிலும், சாஹா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே செய்யாத தவறை, குஜராத் அணி செய்தது. அந்த அணி அதன் பின் ரன் குவிக்க முடியாமல் திணறியது. சாய் சுதர்ஷன் 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து நிதான ஆட்டம் ஆடியதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானது. குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.