சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான சமீர் ரிஸ்வி தனது முதல் இன்னிங்ஸின், முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். ஐபிஎல் தொடரில் தனது முதல் பந்திலேயே அவர் சிக்ஸ் அடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளர் ரஷித் கான் பந்தில் அவர் சிக்ஸ் அடித்து தனது ஐபிஎல் கேரியரை துவக்கினார் சமீர் ரிஸ்வி.
2024 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சமீர் ரிஸ்வியை 8.4 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. அவர் உபி டி20 தொடரில் 9 இன்னிங்க்ஸ்களில் 455 ரன்கள் குவித்து இருந்தார். 11 பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து அவரை சிஎஸ்கே அணி வாங்கியது.

2024 ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்ந்த பின் பேட்டிங் செய்ய வந்தார். ரவீந்திர ஜடேஜாவுகும் முன்பே அவரை அனுப்பியது சிஎஸ்கே நிர்வாகம்.
ஜடேஜாவுக்கு முன்பே பேட்டிங் செய்ய வரும் அளவுக்கு சமீர் முக்கியமான வீரரா? என பலரும் நினைத்த போது தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். ரஷித் கான் வீசிய பந்தை அவர் சிக்ஸருக்கு விரட்டினார். அப்போதே குஜராத் அணி மிரண்டு போய் அவரை பார்த்தது. அதே ரஷித் கான் ஓவரின் கடைசி பந்திலும் அவர் சிக்ஸ் அடித்தார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் வாயடைத்துப் போனார்.
6 பந்துகளில் 14 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் சமீர். ஐபிஎல் கேரியரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒன்பதாவதாக இணைந்தார் சமீர் ரிஸ்வி. ஒரு ஃபினிஷராக தனது வேலையை சரியாக செய்தார். சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.