அகமதாபாத் : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 50 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சிஎஸ்கே அணியின் கிளீசன் நீக்கப்பட்டு ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட்டார்.

இதன்பின் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை வீச மிட்சல் சான்ட்னர் வீசினார். சான்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி மற்றும் சிக்ஸ் அடித்து இருவரும் அதிரடியாக தொடங்கினர். இதன்பின் வழக்கம் போல் 2வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீச வந்தார்.
அந்த ஓவரில் நிதானம் காட்டிலும், ஷர்துல் தாக்கூர் பவுலிங்கில் சாய் சுதர்சன் சிக்ஸ் அடித்து கணக்கை தொடங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் பறக்க, குஜராத் அணியின் ஸ்கோர் 6 ஓவர்கள் முடிவில் 58 ரன்களாக இருந்தது. இந்த சீசனில் குஜராத் அணியின் தொடக்க ஜோடி முதல்முறையாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதனால் ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ருதுராஜ் கெய்க்வாட்.
அந்த ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசிய சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சாய் சுதர்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். 47 பந்துகளை எதிர்கொண்ட சாய் சுதர்சன் 96 ரன்களை விளாசி தரமான சம்பவத்தை நிகழ்த்தினார்.
தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சாய் சுதர்சன் மீண்டும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்பின் சாய் சுதர்சனின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஜடேஜா, சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோரின் பவுலிங்கில் சிக்சர்களை பறக்கவிட்ட சாய் சுதர்சன், 50 பந்துகளில் சதத்தை விளாசி சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரின் சாய் சுதர்சன் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி என்றாலே சாய் சுதர்சன் ஃபார்முக்கு வருவது தொடர்கதையாகி வருகிறது. மும்பை அணியின் பொல்லார்ட் எப்படி சிஎஸ்கே அணிக்கு பிரச்சனையை கொடுத்து வந்தாரோ, அதுபோல் குஜராத் அணியில் இருந்து சாய் சுதர்சன் பிரச்சனையை கொடுத்து வருவதாக பார்க்கப்படுகிறது.