சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. கேகேஆர் அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களையும், சுனில் நரைன் 27 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி சார்பாக ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் 138 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கினர். நிதானமாக தொடங்கிய இருவரும், 3வது ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்பியது. அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டதால், டேரல் மிட்சல் களமிறக்கப்பட்டார்.
பின்னர் ருதுராஜ் - மிட்சல் கூட்டணி இணைந்து அதிரடியை தொடர்ந்தது. குறிப்பாக ஸ்பின்னர்களை ருதுராஜ் அடுத்தடுத்து அற்புதமான ஷாட்கள் மூலமாக பவுண்டரிகளை விளாசினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 52 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அட்டாக்கில் வந்த சுனில் நரைனை, டேரல் மிட்சல் சிக்ஸ் அடித்து அட்டாக் செய்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து சிஎஸ்கே அணியின் ஸ்கோரை 10 ஓவர்களில் 81 ரன்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 45 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். இதன்பின் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்ட மிட்சல் 19 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடி வீரர் சிவம் துபே களமிறக்கப்பட்டார்.
அவர் வந்த பின் உடனடியாக மிட்சல் ஸ்டார்க் அட்டாக்கில் வந்தார். அவரை எளிதாக சிவம் துபே மற்றும் ருதுராஜ் இருவரும் இணைந்து 2 பவுண்டரிகளை விளாசினர். பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசிய 16வது ஓவரில் சிவம் துபே அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசினார். தொடர்ந்து வைபவ் அரோரா பவுலிங்கிலும் ஒரு சிக்சரை விளாச, இதன் மூலமாக கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் வெற்றி உறுதியானது.
ஆனால் அடுத்த பந்திலேயே சிவம் துபே 18 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 28 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன்பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி களம் புகுந்தார். இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதனால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது. அவர் 3 பந்துகளை எதிர்கொண்ட ஒரு ரன்னை எடுத்த நிலையில், கேப்டன் ருதுராஜ் பவுண்டரி விளாசி சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் அடுத்தடுத்து 2 தோல்விகளை அடைந்த சிஎஸ்கே, இந்த போட்டியில் வென்று கம்பேக் கொடுத்துள்ளது.