சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு 3 வீரர்களின் செயல்பாடுகளே காரணமாக அமைந்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 3 சிக்ஸ், 12 ஃபோர்ஸ் உட்பட 108 ரன்களை விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. சிறப்பாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 6 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 124 ரன்களை விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சொந்த மண்ணில் இந்த சீசனில் முதல் தோல்வியை சிஎஸ்கே பதிவு செய்துள்ளது.
சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு ஜடேஜா, தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது நம்பர் 4ல் களமிறங்கிய ஜடேஜா, அதிரடியாக ரன்கள் சேர்க்காமல் ஒருநாள் ஆட்டத்தை போல் 18 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் இவருக்கும் சேர்த்து ருதுராஜ் அதிரடியாக ஆட வேண்டிய தேவை எழுந்தது.
அதேபோல் சிஎஸ்கே அணியின் தீபக் சஹர் நேற்றைய ஆட்டத்தில் மோசமான ஃபீல்டிங் மூலமாக சிஎஸ்கே அணியை வெற்றியை தாரை வார்த்துள்ளார். ஹூடா கொடுத்த கேட்சை பிடிக்காமல் சிக்சருக்கு பந்தை அனுப்பியது, 19வது ஓவரில் பதிரானா பவுலிங்கில் அடிக்கப்பட்ட பந்தை பிடிக்காததால் பவுண்டரி விட்டுக் கொடுத்தது, ஸ்டாய்னிஸ்-க்கு ஒரு பவுண்டரியை கொடுத்தது என்று தீபக் சஹர் வேறலெவல் சம்பவம் செய்தார்.
அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் செய்த தவறுகளும் தோல்விக்கு காரணமாக உள்ளது. பதிரானா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் இருவரும் டெத் ஓவர்களில் வீசப் போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிய பின், கடைசி 5 ஓவரில் ஒரு ஓவரை யார் வீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்போது 16வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதில் 16 முதல் 19 ஓவர்களை முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா வீசியிருந்தால், கடைசி ஓவரை அதிக ரன்களுடன் ஷர்துல் தாக்கூர் கைகளில் ஒப்படைத்திருக்கலாம். ஓவருக்கு 30 ரன்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கையுடன் வீசி இருப்பார். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக இதுபோன்ற செயல்களை செய்தவர் தான் அவர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் செய்த தவறு தோல்விக்கு முக்கிய காரணமாகியது.