லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சல் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. மறுமுனையில் லக்னோ அணி அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால், கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கூடுதல் பிரகாசமாகும். அதேபோல் லக்னோ மைதானமும் சிஎஸ்கே அணியின் வீரர்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை போல் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தாலும், பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக அமைந்திருக்கும்.
இதனால் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்சல் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்று வருகிறார். பேட்டிங்கில் இதுவரை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், மிட்சலுக்கு தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் ஆதரவாக உள்ளது.
ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் பெஞ்ச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் லக்னோ மைதானம் ஓரளவிற்கு சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மொயின் அலி களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஹானே பேட்டிங்கில் ஃபார்மின்றி தவித்து வருகிறார்.
இதனால் நம்பர் 3 அல்லது நம்பர் 4 பேட்டிங் வரிசையில் டேரல் மிட்சலுக்கு பதிலாக மொயின் அலி களமிறங்கினால் சிஎஸ்கே அணிக்கும் கூடுதல் சாதகம் ஏற்படும். இந்த முடிவை சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோர் இணைந்தே எடுத்ததாகவும் கூறப்படுகிறது.