CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த போது தோனி களத்துக்கு வந்தார். அப்போது லக்னோ அணியின் துவக்க வீரராக ஆடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் க்விண்டன் டி காக்கின் மனைவி அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச் அலறியது.
அந்த வாட்ச்சில் அதிக சத்தம் எழுந்தால் எச்சரிக்கும் தொழில்நுட்பம் இருந்தது. தோனி பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தால் அவரது வாட்ச் அலறியது. அதை அவர் பார்த்த போது. 95 டெசிபல் அளவுக்கு ஒலி மாசு இருப்பதாக கூறியதோடு, இதே அளவிலான ஒலியை 10 நிமிடங்கள் கேட்டால் தற்காலிகமாக காது கேட்காமல் போக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. உண்மையில் தோனி களமிறங்கிய போது 124 டெசிபல் அளவுக்கு மைதானத்தில் சத்தம் எழுந்தது. அதை தொலைக்காட்சி நேரலையில் கூட காட்டினார்கள்.

அந்த வாட்ச் அனுப்பிய குறுந்தகவலை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் டி காக்கின் மனைவி. அந்த பதிவிலும் தோனி ரசிகர்கள் தோனியின் பெருமைகளை குறிப்பிட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா 57, ரஹானே 36, மொயீன் அலி 30 ரன்கள் எடுத்த நிலையில், தோனி கடைசி 2 ஓவர்களில் பேட்டிங் செய்து 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. க்விண்டன் டி காக் 54 ரன்களும், கே எல் ராகுல் 82 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 15 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து அசத்தினர். அதன் பின் 2 விக்கெட்கள் இழந்தாலும் லக்னோ அணி எந்த சிக்கலும் இன்றி வெற்றி இலக்கை 19வது ஓவரின் கடைசி பந்தில் எட்டியது.


Click it and Unblock the Notifications