மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் கோட்டையான வான்கடே மைதானத்தின் வெளியே "சிஎஸ்கே, சிஎஸ்கே" என்ற கோஷம் விண்ணை முட்டியது. மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டு இருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களின் கோஷத்துக்கு நடுவே சோகமாக வெளியேறினர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையாக கருதப்படும் வான்கடே மைதானத்தில் வைத்து சிஎஸ்கே இந்த வெற்றியை பெற்றது.

அதிலும் சிஎஸ்கே அணியில் தோனி கடைசி நான்கு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்து 20 ரன்கள் குவித்தார். தோனி களத்துக்கு வந்தாலே வெறி ஏறிப் போகும் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களால் மேலும் உற்சாகத்தில் கரை புரண்டனர். போட்டியிலும் சிஎஸ்கே வென்றதால் வான்கடே மைதானமே சிஎஸ்கே அணியின் கோட்டையாக மாறியது. எங்கு பார்த்தாலும் சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷம் எழுந்தது.
போட்டி 11.30 அணி அளவில் முடிவடைந்தது. அதன் பின் அனைத்து ரசிகர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் வான்கடே மைதானத்தின் வாசலில் "சிஎஸ்கே, சிஎஸ்கே" என்ற கோஷம் விண்ணை முட்டியது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகமாக வெளியேறினர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது, அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா சதம் அடித்த போதும் அந்த அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.