சென்னை : கேப்டன்சி மாற்றத்தை மும்பை அணியை போல் அல்லாமல் சிஎஸ்கே அணி சிறந்து செய்து முடித்ததாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணிகளான மும்பை மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் புதிய கேப்டனுடன் களமிறங்கினார்கள். இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் மும்பை அணியின் கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியாவை பல்தான் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாட தொடங்கிய போதே, அடுத்த கேப்டனாக வருவார் என்று பேச தொடங்கினோம். அவரால் நிச்சயம் ஒரு அணியை வழிநடத்த முடியும் என்று நம்பிக்கை வைத்தோம். அதேபோல் பிளெமிங் மற்றும் தோனி இருவருமே ருதுராஜ் உடன் ஏராளமான ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். அவர்களுக்கும் அந்த திட்டம் முன்னதாகவே இருந்தது.
கிரிக்கெட்டை ருதுராஜ் அணுகும் முறை, அவரின் சிந்தனைகள் அனைத்தும் கேப்டனுக்கு உரியதாக இருந்தது. இந்த சீசனில் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நிச்சயம் சிஎஸ்கே அணியை அவர் சிறப்பாக வழிநடத்தினார். சீனியர்கள் உதவியாக இருந்தாலும், பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை. கேப்டன்சி அழுத்தம் அவருக்கு கொஞ்சம் கூட வரவில்லை. அதனால் வரும் காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் கோப்பையை வெல்வார்.
தோனிக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் வந்திருப்பதால், நிச்சயம் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் தோனியின் நிலையை எட்டுவது எளிதல்ல. ருதுராஜ் கெய்க்வாட் மீது தோனி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அதேபோல் சென்னை அணி ரசிகர்களும் அவரை ஏற்றுக் கொண்டது அவருக்கு உதவியாக அமைந்துள்ளது. ஏனென்றால் மற்ற அணிகள் கேப்டனை மாற்றிய போது எவ்வளவு பிரச்சனைகள் வந்தது என்று தெரியும். கேப்டன்சியில் ரசிகர்களின் பங்கும் உள்ளது.
அதேபோல் தோனியால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் எளிதாக ஏற்றுக் கொண்டார்கள். ருதுராஜ் கெய்க்வாடை சிஎஸ்கே உரிமையாளர்கள் கேப்டனாக தேர்வு செய்யவில்லை. இதுவரை கிரிக்கெட் தொடர்புடைய எந்த முடிவுகளிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தலையிட்டதில்லை. அவருக்கு வெற்றியை எட்டும் பொறுப்பு மட்டுமே உள்ளது. அதுவும் எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.