மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு முன்னதாக ட்விட்டரில் வெளியான ஒரு பதிவால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளானார்கள். அந்த வேலையை செய்தது டெஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் புஜாரா.
ட்விட்டரில் புஜாரா வெளியிட்ட அந்த பதிவில், "சப்பர் கிங்ஸ்! (SupperKings) இந்த சீசனில் உங்களுடன் இணைய காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். அவர் சூப்பர் கிங்ஸ் என எழுதி இருப்பதாகவும் கருதிய ரசிகர்கள், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தான் குறிப்பிட்டு இருக்கிறார் என கருதினர்.

இதை அடுத்து அந்த பதிவின் கீழ் பெரும் விவாதம் துவங்கியது. முந்தைய ஆண்டுகளில் எல்லாம் சிஎஸ்கே அணியை டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அணி என பலரும் கிண்டல் செய்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அதில் இருந்து மீண்டு அதிரடி ஆட்டத்துக்கு சிஎஸ்கே அணி திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஒருவரை சிஎஸ்கே அணி ஆட வைத்தால் சிஎஸ்கே அணி மீண்டும் பின்னோக்கி சென்று விடும் என பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வந்தனர்.
சிலர் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தான் குறிப்பிடுகிறாரா? என கேள்வி எழுப்பினர். சிலரோ அவர் சப்பர் கிங்ஸ் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆங்கிலத்தில் சப்பர் (supper) என்றால் உணவு என்ற பொருள் இருப்பதால் அவர் உணவு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றைத் தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் என சிலர் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
ட்விட்டரில் பெரும் களேபரம் நடந்த நிலையில் புஜாராவின் பதிவு 10 லட்சம் பேரை சென்றடைந்து இருந்தது. இது விளம்பரம் எனும் பட்சத்தில் புஜாரா தனது வேலையை சரியாக செய்து வெற்றி பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசனில் புஜாரா சிஎஸ்கே அணியில் சேர வேண்டும் என்றால் அந்த அணியில் யாரேனும் வீரர்கள் காயத்தால் விலக வேண்டும். இதுவரை அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.