மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த வெற்றிக்கு காரணம் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் போட்டியை மாற்றிய ஒரு ஓவரும், சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது கடைசி நான்கு பந்துகளும் தான்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளே ஓவர்களில் கூட ஒரு ஓவருக்கு 8 ரன்கள் என்ற அளவிலேயே ரன் சேர்த்தது. பின்னர் கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் தோனி களமிறங்கினார். அப்போது சிஎஸ்கே அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

200 ரன்கள் என்ற எண்ணை எட்டினால் மனதளவில் பெரிய ஸ்கோரை எட்டியதாக சிஎஸ்கே அணி நம்பிக்கையுடன் பந்து வீசலாம் என்பதால், அந்த இலக்கை சிஎஸ்கே அணி எட்டுமா? என அனைவரும் காத்திருந்தனர். அப்போது களமிறங்கிய தோனி வரிசையாக மூன்று சிக்ஸர் அடித்து மிரட்டினார். கடைசி நான்கு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார் தோனி. இதை அடுத்து சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது.
அடுத்து பந்துவீச்சின் போது சிஎஸ்கே அணி பதிரானாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 7 ஓவர்களில் 70 ரன்கள் குவித்த போதும் பதிரானாவை அவசரப்பட்டு பயன்படுத்தாமல் கடைசி ஓவர்களுக்காக அவரை ஒதுக்கி வைத்தார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். 8வது ஓவரில் தான் பதிரானாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஓவருக்கு பின் அவர் கடைசி 6 ஓவர்களின் போது தான் தனது மூன்று ஓவர்களை வீசி முடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சிஎஸ்கே அணி இருந்தது.
இந்த நிலையில் 8வது ஓவரில் திருப்புமுனை ஏற்படுத்தினார் பதிரானா. அந்த ஓவரில் அதிரடி ஆட்டம் ஆடி வந்த இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்து ஆபத்தான டி20 பேட்ஸ்மேன் ஆன சூர்யகுமார் யாதவை டக் அவுட் ஆக்கி அவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். அப்போது சரிந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதன் பின் அதிரடி ஆட்டம் ஆட முடியாமல் திணறியது. இடையே சில ஓவர்களில் மட்டும் அதிக ரன்கள் எடுத்தாலும் ஒட்டுமொத்தமாக அந்த அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. பதிரானா பின்னர் கடைசி 6 ஓவர்களின் போது தனது மீதமிருந்த ஓவர்களை வீசி மேலும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதை அடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோனி அடித்த 20 ரன்களும், பதிரானா வீழ்த்திய 4 விக்கெட்களும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.