சென்னை : தோனிக்கு எதிராக 19வது ஓவரில் ராகுல் சஹரை வீச வைத்து சூதாடியதாக பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தொடர்ந்து வந்த பஞ்சாப் அணி வெறும் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு எதிரான தொடர்ச்சியாக பஞ்சாப் அணி 5 போட்டிகளை வென்று அசத்தியுள்ளது. அதேபோல் வாழ்வா சாவா போட்டியில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து 2 முறை வென்றுள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பேசுகையில், சிஎஸ்கே அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியான ஒன்று.
ஒவ்வொரு முறையும் சென்னை அணிக்கு எதிராக 2 புள்ளிகளை வெல்வது ஸ்பெஷலான விஷயம். கடந்த சீசனிலும் சொந்த மண்ணில் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஆனால் எதிரணிகளை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தினோம். அதே பாணியில் தான் இந்த சீசனிலும் செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறோம். சென்னையில் வெயில் எவ்வளவு அதிகமிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனால் இந்த போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்தோம். ரபாடா பவர் பிளே ஓவர்களிலும், அதன்பின் ஸ்பின்னர்களையும் பயன்படுத்த முடிவெடுத்தோம். அது எங்களுக்கு பலனளித்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சஹர் அற்புதமாக வீசினார். அதனால் தோனிக்கு எதிராக 19வது ஓவரில் பவுலிங் செய்ய முடியுமா என்று அவரிடம் கேட்ட போது, உடனடியாக தயாரானார். ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக ரன்களுக்கு சென்றனர்.
அதுபோன்ற நேரங்களில் வித்தியாசமாக செயல்பட வேண்டும். ரூஸோவிடம் கேட்ட போது, ஸ்பின்னர்களை வைத்து சூதாட்டம் தான் ஆட வேண்டும் என்று கூறினார். சில நேரங்களில் சூதாட்டம் கைகொடுக்கும் என்பார்கள். அது எங்களுக்கு கை கொடுத்துள்ளது. அடுத்த போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பேர்ஸ்டோவ் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பிவிட்டார். இதே நம்பிக்கையுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.