எப்புட்றா.. தோனிக்காகவே ஒழித்து வைக்கப்பட்ட ராகுல் சஹர்.. தரமான திட்டத்துடன் வந்த சாம் கரண்!
சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி களமிறங்கினால், ராகுல் சஹரை பவுலிங் செய்ய வைக்க வேண்டும் என்ற முன் திட்டத்துடன் பஞ்சாப் அணி களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 62 ரன்களை விளாசி இருக்கிறார்.

பஞ்சாப் அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்களான ராகுல் சஹர் மற்றும் ஹர்ப்ரீத் பரார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்களில் 55 ரன்களையும், மிடில் ஓவர்களான 7 முதல் 13 ஓவர்கள் வரை 30 ரன்களையும், கடைசி 7 ஓவர்களில் 77 ரன்களையும் சேர்த்துள்ளது. குறிப்பாக மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணி 2 ஸ்பின்னர்களையும் மட்டுமே பவுலிங் செய்ய வைத்தது.
ஒரே ஸ்பெல்லில் ஹர்ப்ரீத் பரார் 4 ஓவர்களையும், ராகுல் சஹர் 3 ஓவர்களையும் வீசினர். இதன்பின் ஹர்சல் படேல், ரபாடா உள்ளிட்டோர் அட்டாக்கில் வந்தனர். ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவி செய்யும் போதும், ராகுல் சஹருக்கு ஸ்பெல்லை முடிக்காமல் பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார்.
இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பினர். ஆனால் சரியாக தோனி களத்திற்கு வந்த போது, உடனடியாக 19வது ஓவரை வீச ராகுல் சஹரை அழைத்தார் சாம் கரண். இது பஞ்சாப் அணியின் தரமான ட்விஸ்டாக அமைந்தது. ஏனென்றால் இந்த சீசனில் தோனி வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ச்சியாக பொளந்து வந்தார்.
ராகுல் சஹரை பொறுத்தவரை கொஞ்சம் விரைவாக ஸ்பின் செய்யக் கூடியவர் என்பதால், தோனி ரன்கள் சேர்ப்பது கடினமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது. பஞ்சாப் அணி திட்டமிட்டதை போலவே முதல் 2 பால்கள் டாட் பாலாக அமைய, அடுத்த 4 பந்துகளில் ஒரு விக்கெட் உட்பட 3 ரன்களை மட்டுமே ராகுல் சஹர் விட்டுக் கொடுத்தார். இதனால் ராகுல் சஹரை ஒழித்து வைத்து சாம் கரண் தரமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்று பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications