சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்களிடையே தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ரிசர்வ் வீரர்களுக்கான பட்டியலில் கலீல் அஹ்மத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக வீரர்களான பத்ரிநாத், ஸ்ரீகாந்த், அபினவ் முகுந்த் உள்ளிட்டோர் கடுமையான குரல்களை எழுப்பியுள்ளனர். தமிழக வீரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும். இதனை பயன்படுத்தி பஞ்சாப் அணியின் மற்ற பவுலர்கள் சிறப்பாக செய்தனர்.
இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. அப்படியிருந்தும் அர்ஷ்தீப் சிங் 52 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இதனால் அர்ஷ்தீப் சிங்கை விடவும் தமிழக வீரர் நடராஜன் எந்த வகையில் திறமையில் குறைவாக இருக்கிறார் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
இந்த சீசனில் பும்ராவுக்கு பின் சிறந்த எகனாமியை கொண்ட இந்திய வீரர் நடராஜன் தான். அதேபோல் பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று போட்டியின் அத்தனை கட்டங்களிலும் நடராஜன் பவுலிங் செய்து வருகிறார். ஏற்கனவே இந்திய அணிக்காக ஆடிய அனுபவம் இருந்த போதும், நடராஜன் தேர்வு செய்யப்படாமல் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.