பெங்களூர் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் மிகவும் முக்கியமான ஆட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்களும், ஆர் சி பி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த அணி பிளே ஆப் க்கு செல்ல வேண்டும் என்று அவர்களுடைய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
ஆனால் இது அனைத்தையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கின்றது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி ஒருவரை தோற்றால் தோனிக்கு இதுதான் கடைசி போட்டி ஆகும். ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி தமிழகத்தின் தத்துப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.

தோனியின் சொந்த ஊர் ராஞ்சி என்பதையே ரசிகர்கள் மறந்து அவருடைய சொந்த ஊர் சென்னை தான் என்று சொல்லும் அளவுக்கு தோனி நம்ம வீட்டுப் பிள்ளையாகவே மாறிவிட்டார் இந்த நிலையில் தோனிக்கு தற்போது 42 வயதாகிவிட்டது. ஏற்கனவே காலில் பல பிரச்சனைகள் இருப்பதால், தோனி பேட்டிங் செய்வது இல்லை.
அப்படியும் வந்தால் கடைசி சில பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சென்று விடுகிறார். இப்படி இருக்கும் பட்சத்தில், அடுத்த சீசன்களில் தோனி விளையாடுவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகும். இதனால் தான் கேப்டன் பதவியை கூட ருதுராஜ் விட்டுவிட்டு தோனி சாதாரண வீரராக களமிறங்குகிறார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை சிஎஸ்கே தோற்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் தோனிக்கு இதுதான் கடைசி ஆட்டமாக இருக்கும். ஒருவேளை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், வரும் 22 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடும். அதில் தோற்றாலும் அப்படியே வெளியேறிவிட வேண்டியதுதான். ஆனால் ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி முதல் இரண்டு இடத்தை பிடிக்க கூட வாய்ப்பு ஏற்படும்.
அதன் பிறகு ராஜஸ்தான் தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் சிஎஸ்கே குவாலிபையர் ஒன்றில் விளையாடும். இது எல்லாம் போக தோனி தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி பக்கத்தில் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை வெற்றி பெற்றால் சென்னையில் விளையாட வேண்டும் என்ற தோனியின் ஆசை நிறைவேறும். ஒருவேளை தோற்கும் பட்சத்தில் தோனி தன்னுடைய கடைசி ஆட்டத்தை பெங்களூருவில் விளையாடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும். இதனால் தோனியின் விதி தற்போது விராட் கோலி டுபிளசிஸ் ஆகியோரின் கையில் தான் இருக்கின்றது.