சென்னை : 2024 ஐபிஎல் தொடர் தான் தோனியின் கடைசி கிரிக்கெட் தொடர், இத்துடன் அவர் ஓய்வு பெற்று விடுவார் என கூறப்படும் நிலையில் அவரது பேட்டிங்கை பார்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியில் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியதால் தோனியின் பேட்டிங்கை பார்த்து விடலாம் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், அவர் பேட்டிங் செய்யவே வரவில்லை. இனி வரும் போட்டிகளிலும் அத்தனை எளிதாக தோனியின் பேட்டிங்கை பார்க்க முடியாது என்பதே உண்மையான நிலை.

அதற்கு காரணம், சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி எட்டாம் வரிசைக்கு சென்று இருக்கிறார். துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை தொடர்ந்து அஜின்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி பேட்டிங் வரிசையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேருக்கு பின் எட்டாவதாகவே தோனி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் முறை இருப்பதால் பேட்டிங்கின் போது ஒரு பந்துவீச்சாளரை நீக்கி விட்டு சிவம் துபே இம்பாக்ட் வீரராக பேட்டிங்கில் இடம் பெறுகிறார். இம்பாக்ட் வீரர் விதி அறிமுகம் ஆகும் முன்பு தோனி ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார். இப்போது கூடுதல் பேட்ஸ்மேன் அணியில் இடம் பெறுவதால் தோனி எட்டாவது வரிசைக்கு சென்று இருக்கிறார். எனவே, இனி 6 விக்கெட் வீழ்ந்தால் மட்டுமே அவர் பேட்டிங் செய்ய வருவார். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதால் தோனி வரும் முன்பே பல போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் இன்னிங்ஸ் முடிந்து விடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி, 4 விக்கெட்கள் மட்டுமே இழந்த நிலையில் 18.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டியது. எனவே, தோனியின் கடைசி ஐபிஎல் தொடரில் மிகச் சில போட்டிகளில் மட்டுமே அவரது பேட்டிங்கை பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.