பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்றால் அது சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம் தான். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிடலாம்.
அதுவே ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 18 ரன்கள் வித்தியாசத்திற்கு மேல் ஜெயிக்க வேண்டும். இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே கேகேஆர், ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நான்காவது இடத்திற்கான போட்டி தான் இன்று நடைபெறுகிறது. இதனிடையே,பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதுவும் போட்டி நடைபெறும் சனிக்கிழமை இரவு பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தனியார் வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
சிஎஸ்கே, ஆர்சிபி போட்டி நடைபெறும் போது 90 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பலரும் கணித்திருந்த நிலையில், இன்று காலை வெயில் அடித்தது. இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், கோடை மழை எவ்வாறு பெய்யும் என்பதை சிலருக்கு சுத்தமாக தெரியவில்லை.
காலையில் வெயில் அடித்தால் நிச்சயம் மாலையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காலையில் மேகமூட்டமாக இருந்தால் மாலையில் மழைக்கு அவ்வளவாக வாய்ப்பு இருக்காது. இன்று மாலை மழை பெய்வதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இருக்கின்றது. எனினும் இரண்டு விஷயம் தான் இன்று ஆட்டம் நடைபெறுமா நடைபெறாதா என்பதை முடிவு செய்யும்.
ஒன்று மழை எந்த நேரத்தில் பெய்யும் என்பதை பார்க்க வேண்டும். மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரை பெய்தால் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் ஆறு மணியிலிருந்து எட்டு மணி இல்லை 10 மணி வரை பெய்தால் நிச்சயம் போட்டி பாதிக்கும். இரண்டாவது விஷயம் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கினால் அது வெளியேறுவதற்கான வசதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நடைபெறும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார்.