சென்னை : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் சான்ட்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீக்சனா சேர்க்கப்பட்டார். பவர் பிளே ஓவர்களுக்காக சேர்க்கப்பட்ட அவர், அந்த வேலையை சரியாக செய்தார்.

தொடக்கம் முதலே ரன்களை குவிக்க முடியாமல் திணறி வந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. அதிகபட்சமாக இளம் வீரர் ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்களை சேர்த்தார். சிஎஸ்கே அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சேப்பாக்கம் மைதானத்தில் எந்த லெந்தில் பவுலிங் செய்தால், ரன்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து சிஎஸ்கே அணி பவுலிங் செய்தது. விக்கெட்டுக்காக தீவிரமாக இருக்காமல் ரன் குவிப்பை கட்டுக்குள் வைப்பதிலேயே சிஎஸ்கே பவுலர்கள் தீவிரமாக இருந்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான திட்டங்களே கொடுக்கப்பட்டது.
பயிற்சியாளர் பிராவோ கொடுத்த திட்டத்தை சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சரியாக செயல்படுத்தினர். குறிப்பாக பேக் ஆஃப் லெந்த் பந்துகளையும், ஃபுல் லெந்த் பந்துகளையும் சிமர்ஜீத் சிங் சரியாக மாற்றி மாற்றி வீசியது அவருக்கு சாதகமாக அமைந்தது.
அதேபோல் ஓவருக்கு 2 பவுன்சர் பந்துகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் சிஎஸ்கே அணி தீவிரமாக இருந்தது. சிமர்ஜீத் சிங் ஒவ்வொரு ஓவருக்கும் சில ஒய்டுகளை வீசினாலும், பவுன்சர் பந்துகளை பயன்படுத்தியதில் அவர் அசரவில்லை. அதேபோல் ஸ்லோ பவுன்சர் போன்ற பந்துகளை முயற்சிக்காமல், 140க்கும் அதிகமான வேகத்தில் சிமர்ஜீத் சிங் வீசியதும் அவருக்கு பலனளித்தது.