ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் லார்ட் தாக்கூர் களமிறக்கப்பட வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு ஷர்துல் தாக்கூர் முக்கியமான காரணம். ஏனென்றால் அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக செயல்பட்டு 21 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பையும் வென்றனர். அதேபோல் பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகளில் ஷர்துல் தாக்கூர் சரியாக பயன்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் ஷர்துல் தாக்கூர் இடத்தில் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக விளையாடி வந்ததால், சிஎஸ்கே அணி நிர்வாகமும் துஷார் தேஷ்பாண்டேவையே பிளேயிங் லெவனில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்சனை காரணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.
இதனால் அவர் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இடத்தில் ஷர்துல் தாக்கூரை களமிறக்க வேண்டும் என்றும், தேவைக்கேற்ப மொயின் அலி மற்றும் தீக்சனாவை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணிக்குள் ஷர்துல் தாக்கூர் வருவதன் மூலமாக 3 பலன்களை சென்னை அணி பெறும். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் ஷர்துல் தாக்கூர். அபாரமான ஃபார்மில் இருப்பதால், நிச்சயம் ஷர்துல் தாக்கூரின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பலனளிக்கும். அதேபோல் இரு பக்கமும் ஸ்விங் செய்யும் திறமை இருப்பதால், ஷர்துல் தாக்கூரால் பவர் பிளே ஓவர்களிலும் பவுலிங் செய்ய முடியும்.
மிடில் ஓவர்களிலும் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஷர்துல் தாக்கூர் முக்கிய பவுலராக இருப்பார். அதேபோல் கிளாசன் போன்ற அதிரடி வீரர்களை ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன் அப் இன்னும் பலம் பெறும். கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரையும் சிஎஸ்கே அணியில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.