இதுதான் அஜித் குமார்.. நடராஜன் பர்த் டே பார்ட்டியில் கலந்துகொண்ட தல.. ஐதராபாத்தில் நடந்த சம்பவம்!
ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. ஐதராபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், சிஎஸ்கே பவுலர்கள் எப்படி செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் ஐதராபாத் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணிக்கு கீழ் பஞ்சாப், ஆர்சிபி, டெல்லி மற்றும் மும்பை ஆகிய அணிகள் இருக்கின்றன. ஐதராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருப்பதால், சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளில் அந்த அணியை வீழ்த்துவது எளிதாக இருக்காது. இருப்பினும் ஐதராபாத் அணியின் பவுலிங் கொஞ்சம் தடுமாற்றமாக உள்ளது.
குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இந்த சீசனின் முதல் போட்டியில் களமிறங்கிய நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் காயம் காரணமாக ஐதராபாத் அணிக்காக நடராஜன் களமிறங்கவில்லை. இதனால் ஐதராபாத் அணியின் டெத் ஓவர் பவுலிங் சுமாராக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழக வீரர் நடராஜன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ஐதராபாத்தில் பார்ட்டி நடைபெற்றுள்ளது. இந்த பார்ட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் வெளியாகியது. தற்போது உச்ச நடிகரான அஜித் குமார், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications