உன்னைய நம்பி பவுலிங் கொடுத்ததுக்கு.. ஒரே ஒவரில் 27 ரன்களை கொடுத்த முகேஷ் சவுத்ரி.. சோகமான ருதுராஜ்!
ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் பவுலர் முகேஷ் சவுத்ரி வீசிய ஒரே ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சிவம் துபே 24 பந்துகளில் 4 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 45 ரன்களை சேர்த்தார். இதன்பின் ஐதராபாத் அணி 166 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.

ஐதராபாத் அணிக்கு ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் முதல் ஓவரை தீபக் சஹர் வீசினார். இந்த ஓவரின் 2வது பந்திலேயே ட்ராவிஸ் ஹெட் கொடுத்த எளிய கேட்சை ஸ்லிப் திசையில் நின்றிருந்த மொயின் அலி தவறவிட்டார். இதனால் அந்த ஓவரின் கடைசி பந்திலேயே சிக்ஸ் அடித்து ட்ராவிஸ் ஹெட் பதிலடி கொடுத்தார்.
இதன்பின் 2வது ஓவரை வீசுவதற்காக இம்பேக்ட் பிளேயரான முகேஷ் சவுத்ரி அழைக்கப்பட்டார். கடந்த சீசனில் காயம் காரணமாக முழுமையாக ஓய்வில் இருந்த முகேஷ் சவுத்ரி, இந்த சீசனில் முதல்முறையாக களமிறக்கப்பட்டார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்த வரவேற்க, 3வது பந்தில் அபாரமாக சிக்ஸ் ஒன்றை விளாசி தள்ளினார். தொடர்ந்து 4வது பந்தில் சிக்ஸ் அடிக்கப்பட, அது ரீப்ளேவில் நோ-பால் என்று தெரிய வந்தது.
இதனால் ஃபிரீ ஹிட்டில் மீண்டும் அபிஷேக் சர்மா ஒரு சிக்சரை அடிக்க, கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரி அடிக்கப்பட்டது. இதன் மூலமாக அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்கள் விளாசப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பின் கம்பேக் கொடுத்த முகேஷ் சவுத்ரியின் முதல் ஓவரிலேயே 27 ரன்கள் அடிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முகேஷ் சவுத்ரி ஓவர் கொடுத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ம் சோகமடைந்தார். இம்பேக்ட் பிளேயராக ஷர்துல் தாக்கூர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேஷ் சவுத்ரியை களமிறக்கியதற்கான காரணம் குறித்து புரியாமல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications