சென்னை : ஐபிஎல் தொடரில் இருந்து நட்சத்திர வீரர் தோனி ஓய்வு பெற்ற பின், முக்கிய பதவிக்கு வர வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள தோனி, இந்த சீசனில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இதனால் கேப்டன்சியில் இருந்து விலகிய அவர், புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ தயார் செய்து வருகிறார். இதற்கான பணிகளை 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே தோனி தொடங்கியுள்ளார்.

கடந்த சீசனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் உடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்ட தோனி, இந்த சீசனில் கேப்டனாகவும் கொண்டு வந்துள்ளார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெமிங் எடுக்கும் முடிவுகள் தான் இறுதியானது. சில நேரங்களில் பிளெமிங்கின் முடிவை காட்டிலும், தோனி தான் அனைத்து விவகாரங்களிலும் முடிவுகளை எடுப்பார்.
அந்த அளவிற்கு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தோனி மீது நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஓய்வுக்கு பின் ஒவ்வொரு சீசனின் போது தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஏற்கனவே சச்சின், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் ஆலோசகராக செயல்பட்டு வருகின்றனர். அதே பாதையில் தோனியும் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிப்பார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஓய்வுக்கு பின் தோனி சிஎஸ்கே அணியின் சிஇஓ பதவிக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக காசி விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார்.
இதன்பின் தோனியை அந்த பொறுப்புக்கு கொண்டு வர சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வீரர்களுக்கான ஏலம் தொடங்கி சிஎஸ்கே அணியின் அத்தனை செயல்பாடுகளிலும் தோனியால் செயல்பட முடியும். இத்தனை நாட்களாக களத்தில் இருந்த தோனி, இனி ஏலத்திலும் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.