ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டி சன்ரைஸர்ஸ் அணியின் மைதானமான ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
என்ன தான் சன்ரைசர்ஸ் அணியின் போட்டி என்றாலும் எங்கெங்கு காணினும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களே நிறைந்து இருந்தனர். போட்டி 7.30 மணிக்கு துவங்க இருந்த நிலையில், அதற்கு நான்கு மணி நேரம் முன்பு இருந்தே மைதானத்தின் வெளியே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற சட்டையை அணிந்து இருந்தனர்.

மேலும், தெலுங்கு சினிமாவின் பெரிய கதாநாயகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் போன்றோரின் ரசிகர்கள் அவர்களின் புகைப்படத்தையும், தோனியின் புகைப்படைத்தையும் சேர்த்து பேனர் அடித்து எடுத்து வந்தனர். மைதானத்தின் உள்ளே பெரிய சம்பவம் ஒன்று நடந்தது.
போட்டி துவங்கும் முன் பயிற்சி செய்ய வெளியே வந்தார் தோனி. அப்போது அவர் மைதானத்தின் உள்ளே ஒரு அடி எடுத்து வைத்த உடன் பெரும் கோஷம் எழுந்தது. பலரும் "தோனி, தோனி" என உற்சாகக் குரல் எழுப்பத் துவங்கினர். அதைக் கண்டு அங்கு இருந்த கொஞ்ச நஞ்ச சன்ரைசர்ஸ் அணியின் ரசிகர்களும் மிரண்டு போனார்கள்.
இந்தப் போட்டிக்கு முன் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், தான் தோனியின் சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த புத்திசாலித்தனமான காரியமும் செய்ய மாட்டேன் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையிலும் அவரது ஆலோசனையின் கீழ் சிஎஸ்கே அணி செயல்படுவதாக பலரும் நம்பும் நிலையில், எதிரணியின் கேப்டனும் கூட அதையே கூறி இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.