ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு காரணம், இந்தப் போட்டி நடைபெற உள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருட்டில் மூழ்கி இருப்பது தான்.
ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் சில கோடிகள் பாக்கி வைத்து இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் அதில் பாதி தொகையை செலுத்திய ஹைதரபாத் கிரிக்கெட் அமைப்பு, இன்னும் 1.63 கோடி பாக்கி வைத்துள்ளது. அந்த தொகையை செலுத்த காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் நேற்று அந்த மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து ஹைதரபாத் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் அவசர அவசரமாக மின் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி இன்னும் ஒரு நாள் மட்டும் அவகாசம் அளிக்குமாறும், அதற்குள் பணத்தை செலுத்தி விடுவதாகக் கூறி இருக்கின்றனர். உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து இருக்கிறார். எனினும், உண்மையான நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியை நடத்தி முடித்து விட்டாலும் இனி வரும் ஐபிஎல் போட்டிகளை நடதும்ப்[ போதும் இதே போன்ற சிக்கல் எழும் என்பதால் அந்த மீதத் தொகையை ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு செலுத்தியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.