ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் பேட்டிங் படுமோசமாக அமைந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் செய்த ஒரு மாற்றம் தான் சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் திணற முக்கிய காரணம். இந்த போட்டிக்கான பிட்ச் கருப்பு மண் கொண்டு தயார் செய்யப்பட்டு இருந்தது. இஹு போன்ற பிட்ச்சில் பந்து பிட்ச்சான பின் சற்று தாமதமாகவே பேட்ஸ்மேனுக்கு வரும்.

அதை பயன்படுத்த முடிவு செய்த சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பவுலர்கள் முற்றிலுமாக மிதமான வேகத்தில் பந்து வீசினர். ஏற்கனவே, பிட்ச் வேறு மந்தமாக இருந்த நிலையில், மெதுவாக வீசப்பட்ட பந்துகள் பேட்ஸ்மேனை வந்து அடையவே கூடுதல் நேரம் ஆனது. வேகம் இல்லாத பந்துகளை அடித்த போது அது எளிதாக பவுண்டரி செல்லவில்லை. மேலும், ரஹானே, ஜடேஜா, டேரில் மிட்செல் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் நிதானமாக வரும் பந்துகளை கணக்கிட்டு அடிக்க முடியாமல் திணறினர்.
சிவம் துபே மட்டுமே இந்த பிட்ச்சில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 140 ஸ்ட்ரைக் ரேட்டை கூட தாண்டவில்லை. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்களும், டேரில் மிட்செல் 11 பந்துகளில் 13 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் அணி பவர் பிளே ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடியது. முதல் 6 ஓவர்களிலேயே 78 ரன்கள் குவித்தது. பின்னர் நிதான ஆட்டம் ஆடி 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.