ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் எடுத்த பல்வேறு முடிவுகள் தவறாக அமைந்ததே தோல்விக்கு காரணமாகியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததன் மூலமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளை அடைந்துள்ளது. 2 வெற்றிகளும் சேப்பாக்கம் மைதானத்திலும், 2 தோல்வியும் விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத் மைதானத்திலும் அடைந்துள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ன் கேப்டன்சியும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஐதராபாத் அணிக்கு 166 ரன்கள் என்ற சுமாரான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அறிந்த உடன், பவர் பிளே ஓவர்களிலேயே 2 முதல் 3 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக வியூகத்துடன் களமிறங்கி இருக்க வேண்டும்.
அதற்கான திட்டமிடல் இருந்தாலும், கேப்டன் தான் களத்தில் செயல்படுத்த வேண்டும். மிகச்சிறந்த ஸ்லிப் ஃபீல்டரான ரஹானேவை விடுத்து மொயின் அலியை ஸ்லிப் திசையில் நிற்க வைத்ததே முதல் தவறாகும். அதேபோல் ஏற்கனவே ஸ்விங் செய்யக் கூடிய பவுலரான தீபக் சஹர் இருக்கும் போது, மீண்டும் ஸ்விங் செய்யக் கூடிய முகேஷ் சவுத்ரியை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்திருக்க கூடாது.
அதேபோல் 3 ஸ்பின்னர்கள் இருக்கும் போது முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே ஜடேஜா அல்லது மொயின் அலியை அட்டாக்கில் கொண்டு வந்திருக்க வேண்டும். இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் தீக்சனாவை வைத்து அட்டாக் செய்திருக்கலாம். ஆனால் முதல் விக்கெட் செல்லும் வரை காத்திருந்து ஸ்பின்னரை கொண்டு வந்தது ருதுராஜ் கெய்க்வாட் செய்த முக்கிய தவறாகும்.
அனுபவ வீரரான ஷர்துல் தாக்கூர் மிகச்சிறப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். அவரை விடுத்து முகேஷ் சவுத்ரியை கொண்டு வந்தது ஏன் என்று சிஎஸ்கே அணி தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் ஷர்துல் தாக்கூர் கில்லாடி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தவறுகளை குறைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கோரி வருகின்றனர்.