சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான தோனி ஓய்வு பெற இருக்கிறார். அதனால், அவரது பேட்டிங்கை காண நாடு முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அது நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு தான் என சிஎஸ்கே வட்டாரம் கூறுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தோனிக்கு 42 வயதான நிலையிலும் விக்கெட் கீப்பிங்கில் புலியாக பாய்ந்து கேட்ச் பிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் கொடுத்த கேட்ச்சை 2.27 தூரம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து கேட்ச் பிடித்தார் தோனி.

அதை வைத்தே அவர் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். விரைவில் அவர் பேட்டிங் இறங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோனி பேட்டிங் இறங்கவில்லை. அதற்கு காரணம் அவர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
இம்பாக்ட் வீரர் விதியால் சிவம் துபே கூடுதல் பேட்ஸ்மேனாக களமிறங்குவதால் தோனி தனது வழக்கமான ஏழாவது இடத்தில் இருந்து இன்னும் பின்னே சென்று எட்டாவது இடத்திற்கு சென்னு இருக்கிறார். என்னதான் எட்டாவது வரிசை என்றாலும் சில போட்டிகளில் அவரை முன்னே பேட்டிங் செய்ய அனுப்பலாம் என சிஎஸ்கே நிர்வாகம் நினைத்தாலும், தோனி அந்த விஷயத்தில் கறாராக இருக்கிறார் என்கிறார்கள்.
தற்போது சிஎஸ்கே அணி அதிரடி பேட்டிங்கிற்கு மாறி இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் 150 ஸ்ட்ரைக் ரேட்டை எளிதாக தொட்டு விடுகிறார்கள். ரச்சின் ரவீந்திரா இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடியில் முத்திரை பதித்து இருக்கிறார்.
இப்படி சிஎஸ்கே வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கும் போது தான் அதை கெடுக்கும் வகையில் இடையே சென்று பேட்டிங் ஆடப் போவதில்லை என்ற எண்ணத்தில் தோனி பேட்டிங் வரிசையில் முன்னிலையில் களமிறங்கவில்லை. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விரைவாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் லீக் சுற்றின் கடைசி சில போட்டிகளில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற தோனி சில போட்டிகளில் பேட்டிங் செய்வார்.ஆனால், அதுவும் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை பொறுத்தே இருக்கும்.